All Ceylon Jamiyyatul Ulama

Incorporated by Parliament Act No. 51 of 2000

Guidelines to Perform Udhiyya

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அது மிக முக்கியமான ஒரு சுன்னத்தாகும். அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது ஜீவ காருண்யத்தை ஏவுகிறது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமப்படுத்திய மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

எனவே உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் ஒருவர் உழ்ஹிய்யாவுக்கான பிராணிகள் மீது கருணையோடு நடந்துகொள்ள வேண்டும். இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுது தான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களையும் அடைந்து கொள்ள முடியும். அல்லாஹதஆலா திருமறையில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

  1. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையும் ஏற்படாது பார்த்துக் கொள்ளவேண்டும்.
  2. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.
  3. உழ்ஹிய்யாவுக்கான பிராணியின் முன்னிலையில் ஏனைய பிராணிகளை அறுப்பது தவிர்க்கப்படவேண்டும்.
  4. அறுப்பதற்காப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
  5. குர்பானி நிறைவேற்றப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
  6. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களையும் புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
  7. நம் நாட்டில் அறுவைக்கென்று ஒரு சட்டம் உள்ளது. அச்சட்டத்தை இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற்கொள்ளல் வேண்டும். (மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்)
  8. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
  9. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்துகொள்ளக் கூடாது.
  10. போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்த வேண்டும்.
  11. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் படங்களை அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  12. உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச பள்ளிவாசல்கள் அல்லது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது சிறப்புடையது.

பள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பிற மத சகோதரர்கள் வாழுகின்ற சுழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக்கொள்கிறது.

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Guidelines to Perform Udhiyya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top